தமிழக வழக்குரைஞர் போராட்டம்

che95.jpeglawyers-720x480

இது   தமிழ்த்தேச எழுச்சிக்கான அறைகூவல் …

வழக்குரைஞர்கள் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுக்க ஏறத்தாழ 15 நாட்களுக்கும் மேலாக வழக்குரைஞர்கள் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தின் தனித்தன்மை மற்றும் இதற்கும் தமிழ்த்தேச விடுதலை அரசியலுக்குமான தொடர்பு போன்றவற்றை நாம் அறிந்து வினையாற்ற வேண்டிய நேரம் இது.

இந்தியாவின் வேறெந்தப் பகுதியிலும் இவ்வளவு பரவலாகவும் முறையாகவும் ஒழுங்கமைக்கப்பட்டு இயங்குகிற வழக்குரைஞர்கள் சங்க அமைப்புகள் இல்லை. நவீனத் தன்மை கொண்டதும் தேச நலன்கள் குறித்த அக்கறை கொண்டதுமான வழக்குரைஞர் சமூகம் தமிழ்த்தேசத்தில் உள்ளது என்பது உண்மையிலேயே நாம் உணரவேண்டிய செய்தி. மேலும் இது குறித்த தமிழ்த்தேச விடுதலை அரசியலை முன்னெடுக்கிற அமைப்புகளுக்கு நல்ல தெளிவு இருக்குமேயானால் இப்போராட்டம் தமிழ்த்தேச எழுச்சியாக இந்நேரம் மாறிவிட்டிருக்கும் என்பது உறுதி

சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல்வேறு சமூகப் பிரிவு மக்கள் தம் அரசியல் உணர்தலைக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அனைத்து நலன்களும் ஒரு புள்ளியில் குவியும் வகையில் தம் மெய்யியலையும் நடைமுறையையும் வளர்த்துக்கொண்டிருக்கும் புரட்சிக்கான இயக்கங்கள் புரட்சியை நடத்தி வெற்றிவாகை சூடிவிடுகின்றன. ஆனால், அதில் தவறிழைக்கின்ற இயக்கங்களோ புரட்சியை, சமூக விடுதலையை, தேசத்தின் விடுதலையை பல ஆண்டுகள் பின்தள்ளக் காரணமாகி விடுகின்றன.

தமிழக வழக்குரைஞர்கள் போராட்டங்கள் ஒரு பார்வை

che95.jpegmadras-high-court-lawyers-form-a-human-chain-during-an-anti-sri-lanka-protest

தமிழகத்தின் வழக்குரைஞர் போராட்டங்கள் நீண்ட மரபு கொண்டவை. தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழ் மொழிக்கான உரிமைக்காகவும் தொடர்ச்சியாகப் போராடி வரக்கூடிய பெருமை தமிழக வழக்குரைஞர்களுக்கு உண்டு. 2009 பிப்ரவரி 19 நாளில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது அந்தப் போராட்டங்களை ஒடுக்க எழுந்த இந்திய ஒடுக்குமுறையின் ஒரு சிறு வெளிப்பாடே.

2009 ஈழப் பேரழிவுக்குப் பிறகு தமிழக வழக்குரைஞர்களிடம் ஒரு தீவிர இந்திய எதிர்ப்புணர்வு வளரத் துவங்கியது. இந்த எதிர்ப்புணர்வு முன்புபோல ஒரு குறிப்பிட்ட சிக்கல் தொடர்பாக எழாமல் ஒட்டுமொத்தமாக இந்திய எதிர்ப்புணர்வாக வளரத்துவங்கியது என்பதை நாம் கவனமாகப் பார்க்கமுடியும். சாதிவேறுபாடுகள் , மதவேறுபாடுகள், வகுப்பு வேறுபாடுகள் இவற்றைக் கடந்து தமிழ்த்தேச விடுதலைக்களம் உருவாகி வருவதற்கான ஒரு தெளிவான அடையாளத்தை வழக்குரைஞர்கள் போராட்டங்கள் நமக்குத் அறியத் தருகின்றன.

நமது சமகாலம் தமிழ்த்தேச உணர்தலை தமிழக மக்களின் பல்வேறு தரப்பினர்களுக்கும் வழங்கியதைப் போலவே தமிழக வழக்குரைஞர்களுக்கும் தமிழ்த்தேச அறிதலையும் உணர்தலையும் வழங்கியது. வலிமையான தமிழ்த்தேச விடுதலை மக்கள் இயக்கம் எதுவும் இல்லாத நிலையில் மற்ற தமிழகத்தின் சமூகப் பிரிவு மக்கள் ஏதும் செய்ய இயலாத கையறு நிலையில் இருந்தனர். ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து தமிழர்களும் இருந்த அதே நேரத்தில் அந்த தமிழர்கள் இணைந்திருந்த தொழிற்சங்கங்கள் முதற்கொண்டு கட்சிகள் வரை அந்தப் போராட்டத்திற்கு எதிராக இருந்தன. மாணவர்களோ தங்களை வழிநடத்தும் வலிமை மிக்க எந்த அமைப்பு வடிவத்திலும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே அவர்களின் போராட்டங்கள் சென்னையில் கடந்த ஆண்டு தாக்கிய வெள்ளம்போல தானே எழுந்து தானே அடங்கிவிட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களாக ஆகிவிட்டன.

இந்திய எதிர்ப்புணர்வு செழித்தோங்கி வளரத் துவங்கிய 2009 நாட்களுக்குப் பிந்தைய காலத்தில் தமிழர்கள் உறுப்பினர்களாக இருந்த எந்த ஒரு அமைப்பும் இந்திய எதிர்ப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை. இந்த இந்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளைத் தம்மிடம் கொண்டிருந்தவர்கள் நன்கு அமைப்பாக்கப்பட்ட சமூகப் பிரிவாக இருந்த தமிழக வழக்குரைஞர்களே. அதனால் தவிர்க்க முடியாமல் அவர்களின் ஒவ்வொரு போராட்டத்திலும் தமிழ்த்தேச எழுச்சி வெளிப்பட்டது.

ஏழு தமிழர் விடுதலை எழுச்சி

நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன், செயக்குமார், ராபர்ட்பயஸ் ரவிச்சந்திரன் எனும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை தமிழகத்தின் வழக்குரைஞர்கள் தீவிரமாக முன்னெடுத்த காலகட்டத்தில் அதன் மிகக்கூடிய உயர்நிலையில் இந்திய எதிர்ப்புணர்வு உருக்கொண்டது. தூக்குதண்டனை நிறுத்தக்கோரும் போராட்டத்தினை நீதிமன்றத்திற்கு உள்ளே வழக்குரைஞர்களும் நீதிமன்றத்திற்கு வெளியே மாணவர்கள் உள்ளிட்ட மற்றவர்களும் தமிழ்த்தேச இயக்கங்களும் முன்னெடுத்தனர். இந்திய அரசுக்கும் அதன் அதிகார வகுப்பினர்க்கும் ஏழுதமிழர்களில் எவரையும் தூக்கில் போடாமல் தடுத்துவிட்ட தமிழ்த்தேசத்தின் எழுச்சி தீவிர எரிச்சலையும் வன்மத்தையும் ஏற்படுத்திவிட்டதை அதன்பின்னான நாட்கள் நமக்குச் சொல்கின்றன. ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்கள் இந்த ஏழுதமிழர் விடுதலையில் சாதிமதவேறுபாடுகளைக் கடந்து ஒன்றுதிரண்டனர். வெற்று மனித உரிமை ஒப்பாரியாக இல்லாமல் இந்தப் போராட்டங்கள் தமிழ்த்தேச எழுச்சியாக மாறிவிட்டிருந்ததை யார் உணர்ந்தார்களோ இல்லையோ இந்திய அதிகார வகுப்பு உணர்ந்துகொண்டது.

bloody back day

பல்வேறு போராட்டங்கள் அனைத்து வேற்றுமைகளையும் கடந்து தமிழ்த்தேசப் போராட்டங்களாக உருக்கொண்டதில் தமிழக வழக்குரைஞர்களின் பங்கு அளப்பரியது. அதன் விளைவாக இந்திய அரசு நேரடி ஒடுக்குமுறையை தமிழக வழக்குரைஞர்கள் சமூகத்தை நோக்கி பல்வேறு வழிகளில் திட்டமிட்டு அரங்கேற்றத் துவங்கியது. 2009 பிப்ரவரி 19 கருப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் அளவுக்கு காட்டுத்தனமான காவல்துறை அடக்குமுறைக்குப் பின்னாலும் இந்திய எதிர்ப்புணர்வு தீவிரப்பட்டுவந்ததால் இந்திய அரசு சற்று பின்வாங்கியது. களத்தையும் போரையும் குறித்து ஆய்வு செய்து புதிய முறையில் போரைத் தொடங்கியது. நீதியரசன் கவுல் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த கதை இதுதான்.

நீதிபதிகளுக்கு அடிமையாக வழக்குரைஞர்கள்…

நீதிபதிகளின் முன் கண் சிமிட்டக்கூடாது,,, முறைக்கக்கூடாது… எதிர்த்துப்பேசக்கூடாது… நீதிபதி காசு கேட்டதாகச் சொல்லி கட்சிக்காரரிடம் காசுவாங்கக் கூடாது குடித்துவிட்டு நீதிமன்றத்திற்குள் வரக்கூடாது நீதிபதி ஊழல் செய்வதாகக் கதைவிடக்கூடாது என்றெல்லாம் சொல்லிவிட்டு இந்த த்திருத்தம் சொல்லும் மிகவும் முதன்மையான செய்தி நீதிமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடக்கக்கூடாது.. நீதிமன்ற வளாகத்தினுள் எந்த போராட்ட முன்னெடுப்பும் இருக்கக்கூடாது என்பதும்தான். இந்த அடிப்படைக்கூறு தமிழக வழக்குரைஞர்களின் தமிழ்த்தேச எழுச்சியை வேரோடு பிடுங்கி எறியும் திட்டத்தோடு கவுல் போன்ற கழிசடை நீதியரசன்களால் இங்கே நடைப்படுத்த முயற்சி நடைபெற்றுவருகிறது.

இந்தியப் புரட்சிக்கு இலவு காத்திருக்கும் மகஇக போன்ற அமைப்புகள் வழக்குரைஞர் போராட்டத்தில் குழம்பிய குட்டையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தாலும் வழக்குரைஞர் போராட்டங்கள் அனைத்தும் தமிழ்த்தேசப் போராட்டங்கள் என்பதை மூடி மறைக்க யாராலும் முடியவில்லை. தங்களின் கோரிக்கைகளில் தமிழ்த்தேச விடுதலைக்கான விதைகள் அடங்கியிருப்பதை வழக்குரைஞர்கள் அறிந்துணர வில்லையாயினும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தமிழ்த்தேசத்தின் உரிமைகள் என்று அவர்கள் அறிந்தே உள்ளனர். உயர்நீதிமன்றத்தில் தமிழ் எனும் முழக்கம் உண்மையில் ஒரு மனித உரிமை முழக்கம் இல்லை அது தமிழ்நாட்டின் உரிமை முழக்கம் என்பதை பெரும்பாலான வழக்குரைஞர்கள் அறிந்தே இருக்கின்றனர். அதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தின் காவல்பணிக்கு நடுவண் தொழிற்பாதுகாப்புப்படையினர் நிறுத்தியிருப்பது தமிழர்களை இழிவுபடுத்துவது என்றே அவர்கள் புரிந்துகொள்கின்றனர். தமிழ் மொழி தமிழ் இனக் காப்புப்போராட்டங்களில் சாதி கலக்கக்கூடாது என்பதில் வழக்குரைஞர்கள் தெளிவாகவே உள்ளனர். மேலும் இந்தியாவை எதிர்த்து வைக்கும் எந்தக் கோரிக்கையையும் அவர்கள் எளிமையாக வைத்தால் கூட இந்திய அரசு அதை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதை அவர்கள் புரிந்துகொண்டும் உள்ளார்கள்.

மக இக முன்வைப்பதைப்போல வழக்குரைஞர்களின் இந்தப்போராட்டங்களை நீதிபதிகளின் ஊழல்களுக்கு எதிரான வெறும் ஊழல்எதிர்ப்பு போராட்டமாகவோ, சனநாயகக்கோரிக்கைக்கான வெறும் மனித உரிமை ஒப்பாரிப்போராட்டமாகவோ நாம் பார்ப்போமேயானால் நாம் தலைவர் தமிழரசனின் மாணவர்களாக ஒருபோதும ஆக முடியாது என்பது திண்ணம்.

நடைபெறும் வழக்குரைஞர்களின் போராட்டங்கள் தமிழ்த்தேச உள்ளீடு மிக்க போராட்டங்கள் என்பதை நாம் உணர்ந்து செயலாற்றவேண்டும். மனித உரிமையாளர்கள் ஒப்பாரி வைப்பதைப்போல இங்கு சனநாயகம் வாழவும் இல்லை கொல்லப்படவும் இல்லை. இந்தியப் புரட்சி மங்குனிகள் சிலர் சொல்வதுபோல இது ஒர் அரசியலமைப்பு சார்ந்த நெருக்கடியுமில்லை ( CONSTITUTIONAL CRISIS) . இது தில்லியில் நடந்த அரவிந்த் கெஜ்ரிவால் எழுச்சியை உருவாக்கியது போன்ற நடுத்தரவகுப்பின் வெறுமைசூழ்ந்த வாழ்விலிருந்து தோன்றிய வெற்று ஊழல் எதிர்ப்பு போராட்டமும் இல்லை.

index

சாதியைக் கடந்த மதப்பிரிவினையைக் கடந்த தமிழ்த்தேச எழுச்சியை உள்ளீடாக க் கொண்ட சனநாயகப் போராட்டங்கள் இவை என்பதை நாம் உணர்ந்தால் எல்லாப்போராட்டங்களையும் அதிகாரத்தைக் கைப்பற்றும்போராட்டத்தோடு இணையுங்கள் என்று தலைவர் நமக்கு அளித்த கடமையைச் செய்யும் திசை நோக்கி நம்மால் உறுதியாகச் செல்ல முடியும்.

தமிழக வழக்குரைஞர் போராட்டங்கள் தமிழ்த்தேசப் போராட்டமாக எழுச்சி கொள்ளட்டும் !